என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா?

>> Wednesday, July 8, 2009

1. வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா? - சில முக்கியத் தகவல்கள்!

2.அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் கூறுவது?

3.பாபர் மசூதி இடிப்பு- நியாயம் கிடைத்துப் பயன் என்ன?

1. வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா? - சில முக்கியத் தகவல்கள்!

“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி.

வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை எ‎ன்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே எ‎ன்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகி‎‎ன்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல ‏ இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.

செ‎ன்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd) என்ற நிறுவனத்தி‎ன் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்களை சந்தித்தோம்.

சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தி‎ன் எந்தெந்தத் துறைகளை நா‎ம் அணுக வேண்டும்?மாநில அரசி‎ன் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபி‎ன்‏ இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் எ‎ன்ன?

சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களே‎ன்.நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம்.

ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.

இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை எ‎ன்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். ‏ இ‏தை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.

அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?

வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அ‎னைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), 'அ' பதிவேடு (‘A' Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை‏ இந்தத் துறை பராமரிக்கிறது.

நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தா‎ன் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போ‎ன்ற விவரங்களுட‎ன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா எ‎ன்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையி‎ன் விவரங்களும் இருக்கும்.

ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதா‎ன் ‘அடங்கல்' என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.'அ' பதிவேட்டில் (‘A' Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எ‎ண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் எ‎ன்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.

இதில் இவ்வளவு விஷயங்கள் ‏இருக்கி‎ன்றனவா! சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் எ‎ன்னவாகும் எ‎ன்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களே‎ன்.

பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில் வரி செலுத்தி விடுவார்.

மேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார்.

அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும்.

நாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே, நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து வருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

2.அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் கூறுவது?

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் கூறுவது என்பதை எழுதி வைக்க உத்தரவு

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் அதுபற்றி யாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்பதை கொட்டை எழுத்துகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் எழுதி வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஆனால், இந்த உத்தரவு பல அலுவலகங்களில் மீறப்பட்டு உள்ளது.

எப்படி உருவானது இந்தப் பழக்கம்?
மக்கள் ஒரு வேலையாக அரசு அலுவலகத்திற்கு போகிறார்கள். அங்கே கூட்டம் அதிகமாக இருந்தால், கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்து, வரிசையில் காத்திருந்து அந்த வேலையை முடித்துவிட்டுப் போகலாம் என்று நினைக்கமாட்டார்கள். அங்கிருக்கும் பியூனிடம் பணம் கொடுத்து வேலை வேகமாக முடிக்கப் பார்க்கிறார்கள்.

இப்படி சிலர் கொடுக்கும் பணம், பியூனுக்கு நூறு, ஆயிரமாக சேருகிறது. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் ஏற்படுத்திய இந்தப் பழக்கம், காசு, பணம் இல்லாதவர்களும் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது.

அரசு அலுவலக பியூனில் இருந்து உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குவது பரவலாகக் காணப்படுகிறது. தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக லஞ்சப் பேர்வழிகள் பிடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆண் அதிகாரிகளைப் போல பெண் அதிகாரிகளும் பிடிபடுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

கிராம நிர்வாக அலுவலர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரி, வருவாய்த் துறை அதிகாரி, பத்திரப் பதிவு அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் என்று லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்

லஞ்சப் பேய் தலைவிரித்தாடுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடம் தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளன. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்றும் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு டெலிபோன் செய்யுங்கள் என்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் எழுதி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால், பல அலுவலகங்களில் அரசு உத்தரவு மீறப்பட்டுள்ளது. இந்த வாசகம் எழுதி வைக்கப்பட்டு உள்ள அலுவலகங்களில், கண்ணில்படாத இடத்தில் அதை வைத்துள்ளனர். இந்த வாசகத்தை, கொட்டை எழுத்துகளில் தெளிவாக எழுதி அனைவரது பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ லஞ்சம் கேட்டால் அதுகுறித்து சென்னை சாஸ்திரி பவனில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரெண்டிடம் 044&28273186, 28270942 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

98400 49224 என்ற செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல் சேவை) அனுப்பலாம்.

044&28213828 என்ற பேக்ஸ் மூலமும் புகார் செய்யலாம். புகார் தெரிவிப்பவரின் பெயர், முகவரி, போன் நம்பர் ஆகிய அனைத்தும் ரகசியமாக வைக்கப்படுகிறது.

எந்த எண்ணில் புகார் தெரிவிப்பது?

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் தலைமை அலுவலகத்தை 044&24615989, 24615949 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு கெட்ட பழக்கமே லஞ்சம். இதற்கு ஒரு தரப்பினரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. தவறு என்பது ஒரு பாதியல்ல; சரிபாதி. லஞ்சம் வாங்குபவரை தண்டிப்பது போல லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பவர்களையும் கண்டுபிடித்து தண்டித்தால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

3. பாபர் மசூதி இடிப்பு- நியாயம் கிடைத்துப் பயன் என்ன?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 17 ஆண்டுகள் கடந்து நியாயம் கிடைத்துப் பயன் என்ன? --எம்.ஜே.அக்பர்.

பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டதிலிருந்து ஏழு நாள்களுக்குள் அது பற்றிய முதல் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.

டிசம்பர் 13 ஞாயிற்றுக் கிழமையன்று தனது நண்பர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்குத் தனது நண்பர்கள், மற்றும் சக அமைச்சர்கள் குழுவை அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் சரத்பவார் அழைத்தார். ஓர் அரசு அமைப்பினால், அது புலனாய்வுத் துறையாக இருக்கவேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றி முழுமையாக எடுக்கப்பட்ட வீடியோ படத்தை அவர் பார்த்தார்.

இந்தப் பழைய படச்சுருள்கள் அரசு ஆவணக் காப்பகத்தில் எங்கேயோ இன்னும் இருக்க வேண்டும். 6 ஆம் தேதி மாலை மசூதி இடிந்து விழுந்த நிகழ்ச்சி நடந்த அன்று நிகழ்ந்த தொடர் நிகழ்ச்சிகளைப் பற்றி இந்த படச்சுருளில் இருப்பதை விட அதிகமாக எந்த ஒரு விசாரணைக் கமிஷனாலும் தெரிவித்து விட முடியாது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியின் காரணங்களும் பொது ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டியவையாகும். அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை, திடீரென்றோ, ரகசியமாகவோ மேற்கொள்ளப்பட்டது அல்ல.

தனது அரசியல் செயல்திட்டத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்டவிரும்பிய அத்வானி திட்டமிட்டு பரவலான ஊடக விளம்பரத்தைப் பெற்றார்.

1989 இல் பொதுத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ராமர் கோயில் கட்டுவதற்காக காங்கிரஸ் அடிக்கல் நாட்டியதிலும் எந்த ரகசியமும் இல்லை. நாடகக் காட்சி போன்று அப்போது நடைபெற்ற தேர்தலில், போஃபர்ஸ் பீரங்கி ஊழலுடன், பாபர் மசூதி-ராமர் கோயில் என்பதும் முக்கிய பிரச்சாரச் செய்திகளாக இருந்தன.

அண்மையில் வருண் காந்தி பேசியது போன்ற முஸ்லிம் எதிர்ப்புப் பேச்சுகள் 1989 ஆம் ஆண்டில் பா.ஜ.க. வினரால், உரத்த குரலில் பேசப்பட்டவை-தான்; ரகசியமாகவோ, தாழ்ந்த குரலிலோ பேசப்பட்டவை அல்ல.

தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில், பாபர் மசூதி இருக்கும் அந்த இடத்திலேயே நாங்கள் ராமர் கோயில் கட்டுவோம். முஸ்லிம்களுக்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும்; இல்லாவிட்டால் கல்லறைக்குச் செல்ல நேரிடும் என்று பா.ஜ.க. வினர் எழுப்பிய வெறிக்கூச்சல் பேச்சுக்குப் பின்னர் தடை விதிக்கப்பட்டது.
அனைவரும் காணும்படி வெளிப்படையாக கலவரத்தை, வன்முறையை வெடித்துச் சிதற வைக்கக்கூடிய விளையாட்டுதான் ஜனநாயகம்.

இதில் விசாரணை செய்ய இன்னும் என்ன பாக்கி இருக்கிறது?

இந்த நீதி விசாரணைகளினால் செய்ய இயன்றதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த உண்மைகளின் மீது நீதித்துறையின் நடுநிலைமைத் தன்மை என்னும் முத்திரையைக் குத்துவதுதான்.

எனவே, 1992 டிசம்பர் 16 அன்று நியமிக்கப்பட்ட லிபரான் விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதில் வியப்பதற்கு ஏதும் இருக்கவில்லை.

விசாரணையை அவர் மேலும் 6 மாத காலத்திற்கோ, ஓராண்டு காலத்திற்குக் கூட நீட்டித்து இருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். அதற்கு 17 ஆண்டு காலத்தை அவர் ஏன் எடுத்துக் கொண்டார்?

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது அனைவக்கும் தெரிந்ததுதான். விசாரணைக்கு அழைக்கப்பட்டால் வரக்கூடிய நிலையில் அவர்களும் இருந்தனர்.

வி.பி. சிங்கின் சாட்சியத்தைப் பெற ஒன்பது ஆண்டு-களையும், நரசிம்மராவின் சாட்சியத்தைப் பெற ஒன்பதரை ஆண்டுகளையும் ஏன் லிபரான் எடுத்துக் கொண்டார்?

அவர் சாட்சியம் அளிக்க அழைப்பு அனுப்பியிருந்தால், அதைத் தவிர்க்க அவர்கள் நிச்சயமாக முயன்றிருக்க மாட்டார்கள்.

அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் சாட்சியம் அளிக்கும்போது பா.ஜ.க. அரசில் அமைச்சர்களாக இருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னாள் தலைவர் சுதர்சன் 2001 பிப்ரவரி 6 அன்றுதான் சாட்சியமளிக்க வந்தார். நரசிம்மராவ் 2001 ஏப்ரல் 9 ஆம் தேதியன்றுதான் சாட்சியம் அளித்தார். பிரதமர் பதவியை இழந்த பின் இந்த இடைப்பட்ட நான்கு ஆண்டு காலத்தில் அவர் கூறவேண்டியதை எல்லாம் கமிஷனிடம் முன்னமேயே கூறியிருக்கலாம்.

கமிஷனின் முதல் நோக்கம் 2001 ஆம் ஆண்டிலேயே நிறைவேறிவிட்டதோ?

ராவ் பிரதமர் பதவியை இழந்த பின்னரும் கமிஷன் நீடித்திருந்தது; அதனால் கமிஷனின் அறிக்கையைப் பயன்படுத்தி எவரும் நரசிம்மராவ் பதவி விலகவேண்டும் என்று கோரமுடியாது என்பது உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.

பாபர் மசூதி இடிப்பின் பின்னும் நரசிம்மராவ் பதவியில் நீடிக்க முடிந்ததற்குக் காரணமே, அவர் அதிகமாக அஞ்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியில் உள்ள முஸ்லிம்களை விலைக்கு வாங்க முடிந்தது என்பதுதான்.

அரசில் இருந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது; வெளியில் இருந்தவர்கள் 1993 ஜனவரியில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

மனச்சாட்சி விலைக்கு வாங்கப்பட்டுவிட்டதால், வாழ்க்கையும் அதன் போக்கிலேயே போய்க்கொண்டிருந்தது.

1992 டிசம்பர் 6 அன்று நடந்த நிகழ்ச்சிகளில் ஒரே ஒரு புதிரை மட்டும் லிபரான் கமிஷன் விடுவித்து இருந்தாலும் போதும்.

அன்று முழுவதும் நரசிம்ம ராவ் என்ன செய்து கொண்டிருந்தார்?

பாபர் மசூதி இடிக்கப்பட்டது திடீரென நிகழ்ந்ததல்ல; ஆற்றல் மிகு வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டதல்ல. அதன் ஒவ்வொரு கல்லாக நீக்கப்பட்டு அது வீழ்த்தப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு கல்லாக மசூதி இடிக்கப்படுவதை கரசேவகர்கள் பார்த்து முழக்கம் எழுப்பி பாராட்டிக் கொண்டிருந்தனர்.

அப்படியானால், காலையில் இருந்து மாலை சூரியன் மறையும் வரை ஒவ்வொரு மணியும், நிமிடமும் ராவ் என்னதான் செய்து கொண்டிருந்தார்?

அரசு ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கேட்டு பதட்டமடைந்த காங்கிரஸ்காரர்களும், பெண்களும் தொலைபேசியில் பேசியபோது, ராவ் தூங்கிக் கொண்டிருந்ததாக அவரது தனி உதவியாளர் கூறியிருக்கிறார்.
இதுதான் அரசின் தரப்பில் அளிக்கப் படும் பதில் என்பதை அறிந்து அவர்கள் திடுக்கிட்டுப் போயினர்.

ஆனால், அரசு கவிழ்க்கப்பட்டு விட்டால், அதிகப்படியான ஒரு விலையை காங்கிரஸ் கட்சி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த பின் அவர்கள் அமைதியடைந்தனர். அத்துடன், அப்போது மவுனமாக இருப்பதில் உறுதியான பலன்களும் கிடைக்கும் என்பது நிச்சயம்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதி விசாரணை 17 ஆண்டுகாலம் நடந்ததற்கு பகுத்தறிவுக்குப் பொருந்தும் காரணம் எதனையும் கூற முடியாது; ஆனால் அதற்கான அரசியல் காரணத்தை வேண்டுமானால் கூறமுடியும்.

1992_க்கும் 2004 இக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த ஒவ்வொரு மத்திய அரசுக்கும் அந்த வழக்கைத் தாமதப்படுத்த ஏதோ ஒரு சுயநலக் காரணம் இருந்தது.

நரசிம்மராவ், சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களாக இருந்த போது (அப்போது சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கவில்லை), இந்த வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி இருந்தால், தேவ கவுடே மற்றும் குஜ்ரால் அரசுகள் ஒரு நாள் கூட பிழைத்திருக்க முடிந்திருக்காது.

தங்களுக்கு ஆதரவு தருபவர்கள் மீது குற்றம் சுமத்தும் ஓர் விசாரணை அறிக்கை தரப்படுவதை தேவகவுடாவோ, குஜ்ராலோ விரும்பியிருக்கமாட்டார்கள்.

ஆறு ஆண்டு காலம் ஆட்சி செய்த பா.ஜ.க. தலைமையிலான அரசில் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் முன்வரிசையில் அமைச்சர்களாக அமர்ந்திருந்தனர்.

மசூதி இடிந்து விழுந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக உமா பாரதி மட்டும் வெளிப்படையாகக் கூறினார்.

மசூதி இடிப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ள நான் தயார்; என்னை தூக்கில் போட்டாலும் கவலையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது தனது அறிக்கையை லிபரான் அளித்திருந்தால், பா.ஜ.க. வுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க முடியும்.

எனவே, அவர் ஒவ்வொரு முறையும் கால நீட்டிப்பு கேட்டு வாங்கிக் கொண்டே இருந்தார். இது பற்றி பொதுமக்களும் கேள்வி எழுப்பாமல் அமைதியாக இருந்தனர்; தனிப்பட்டவர்களும் நிம்மதியாக இருந்தனர்.

மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்திருந்தாலும், அவருக்கும் பாபர் மசூதி அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விசாரணை அறிக்கை அளிப்பதில் செய்யும் தாமதம் பல விதங்களில் சவுகரியமாக இருக்கும்போது, அதைப் பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்?

தெரிந்தோ, தெரியாமலோ கொள்கை அளவில் பெரிதும் மாறுபட்டிருக்கும் இரு பெரும் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகளை லிபரான் காப்பாற்றியிருக்கிறார்; பாதுகாத்திருக்கிறார்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன்.

2004 இல் பா.ஜக. பதவி இழந்த பின் லிபரான் ஏன் தனது அறிக்கையை அளிக்கவில்லை- நரசிம்மராவ் அரசில்?

நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா,மொழியாக்கம் : த.க.பாலகிருட்டிணன்

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP