என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும் !!

>> Thursday, April 29, 2010

“பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். -- சுகி. சிவம்

தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம்.

ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க வேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.

காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர் அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார். கடிகாரம் கப்.. சிப். வாய் மூடிக்கொண்டது.
உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை. அவரது முன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையை விட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை. தமது தோல்வியை விட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார்.

இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே… பிறகு எழுத்திருக்கலாமே என்று ஆசைப் படுகிறவர்கட்கு ஒரு வார்த்தை, இதைவிட செத்துப் போகலாம். காரணம் தூங்குவதும் சாவதும் ஒன்றுதான். உறங்குவது போலும் சாக்காடு. அதிகம் தூக்கத்தை நேசிக்கிறவர்கள் உண்மையில் சாவை நேசிக்கிறவர்கள். எழுவதை ஒத்தி வைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.

“பிறகு படித்துக் கொள்ளலாம்… அப்புறம் வேலை பார்க்கலாம்… கடைசியாகச் செய்து விடலாம்” என்று பேசுகிறவர்கள்… நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். சொந்த விரோதிகள். காரணம் “நிறைய நேரம் இருக்கிறது பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பது அதிசயமான உண்மை.

இப்போது மறைந்த போப்பாண்டவருக்கு முன்னால் இருந்த போப்பாண்டவர் சொன்னதாக ஒரு நல்ல சம்பவம். மூன்று அமெரிக்கர்கள் இத்தாலிக்கு வந்தவர்கள் ரோமில் வந்து போப்பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்? என்று கேட்டார். ஆறு மாதம் என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றிப் பார்க்க மாட்டீர்கள்… முடியாது என்றார் போப்.

அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம்தான் தங்கப் போகிறேன் என்றார். நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள் என்றார் போப். பிறகு அடுத்தவரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம்” என்றதும் அவர் ஒரு வாரம்தான் எனக்கு விடுமுறை… அதற்குள் நான் எப்படி இத்தாலியைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.

போப்பாண்டவர் சிரித்தபடி “ஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள்…!” என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார். நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்” என்று அழகான விளக்கம் அளித்தார்.

உண்மை “பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் காலத்தில் தமிழ் அச்சில் இல்லை. ஓலைச் சுவடியிலும் தமிழறிஞர்கள் வாயிலும் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது. ஆனால், தேடித்தேடி படிக்கிற ஆர்வம் உ.வே. சாமிநாதய்யர் அவர்கட்கு இருந்தது. ஒவ்வொரு வரிமட்டும் பாடி பிச்சை எடுத்த ராப்பிச்சைக்காரனிடம் முழுப் பாட்டையும் கேட்க பின்னாலேயே போய்ப் பாட்டை முழுதாகச் சேகரிக்கும் வெறி இருந்தது.

இன்று தமிழ்ப் பாடல்கள் அச்சு வாகனம் ஏறி புத்தகம் ஆகி வெளிவந்தபடி இருக்கின்றன. ஆனால், படிக்கும் வெறி எத்தனை பேருக்கு இருக்கிறது. கவனமாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதே இல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்தி விடுவார்கள்.
நிறைய நேரம்… நிறைய வாய்ப்புகள்… என்று நிரம்பி வழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள்.

கொஞ்சம்தான் நேரம்… கொஞ்சம்தான் வாய்ப்பு… கொஞ்சம்தான் பணம்… கொஞ்சம்தான் ஆயுள்… என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள் நிச்சயம் ஜெயிக்கிறார்கள்.
நாளை… நாளை என்று நாளை ஒத்திப் போடுகிறவர்களைப் பார்த்து ஆழ்வார் கேட்கிறார்… நாளை நாள் நமது நாளா? நமனது (எமன்) நாளா? யார் அறிவார். எனவே ஒத்திப்போடாமல் இன்றே… இப்போதே… இந்த கணமே என்று அவசரப்பட அழைக்கிறார் ஆழ்வார் ஒருவர்.

இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர் விஞ்ஞானத்தில்… இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு உடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்று சனிக்கிழமை… நாள் நன்றாக இல்லை… திங்கட்கிழமை சேருவோம்” என்று ஒரு நாளை (இடையில் உள்ள ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போது விஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக முக்கிய காரணம் பணிமூப்பு. ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்பு என்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரி முதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரை முதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார்.

ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டு இருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி வைத்து விட்டது. பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். -- சுகி. சிவம்
********************

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP