என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

போலி கௌரவம் தேவையா? !

>> Tuesday, April 27, 2010

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை?

நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.

''கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.

"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.

"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர். இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.

நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கௌரவவுமே முக்கியக் காரணம்.

போலி கௌரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது.

ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான்.

யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.

உலகில், போலி கௌரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல.

அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள்.

கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.

"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கௌரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.

இந்த போலி கௌரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.

"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கௌரவத்தின் அறியாப்பருவம்.

"இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கௌரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கௌரவதிற்கும் என்ன சம்பந்தம்?

நாம் கௌரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்?

பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கௌரவம்.

பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்!

அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கௌரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கௌரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.

சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது.

வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?

இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கௌரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது.

'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர்.

'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விஞ்க்களை அவர்கள் வெல்ல முடியும்.

'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.

பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை?

நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.

தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து.

அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்!

மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள்.

நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை.

'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.

உடைக்கப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை;

உருக்கப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை,

பிசையப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை;

அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை;

நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது.

இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கௌரவமா அல்லது போலி கௌரவமா என்பதுதான் கேள்வி.

போலி கௌரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!

posted by: Mohideen
SOURCE:www.nidur.info
***********************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

2 comments:

Unknown April 27, 2010 at 5:27 PM  

நிச்சயமாக மிகசிறந்த பதிவு இதைப்போல் வாழ்க்கைக்கு தேவையான பதிவுகள போடவும் அன்பரே வாழ்த்துக்கள்

Dharmarajan April 30, 2010 at 12:47 PM  

Nice only

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP