என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இருப்பது போதும் என்று உங்களை உட்படுத்திக் கொள்ளாதீர்கள்

>> Tuesday, June 1, 2010

இப்படி இருந்தால் எப்படி? தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள்?

இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.
இந்தக் கேள்வி, எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.

உங்கள் வாழ்க்கையையும் மாற்றப் போகிறது.

யோசிக்கும் சக்தி, செயல்படும் சக்தி எல்லாம் இருந்தும், ஓர் எல்லைக்கு மேல் போகாமல் இருப்பதை வைத்து நிம்மதியாய் இருப்பவர்கள் ஒருவகை.

இருக்கும் நிலையில் நிறைவு பெற்றுவிடாமல், “இப்படியே இருந்தால் எப்படி’ என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு இன்னும் புதிய உயரங்களை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவர்கள் இன்னொரு வகை.

ஒவ்வொருவரும் தங்களுக்குத் தாங்களே போட்டிருக்கும் வட்டத்தை “வசதி வட்டம்”, “பாதுகாப்பு வட்டம்” என்று விதம் விதமான வார்த்தைகளால் வர்ணிக்கிறார்கள். அப்பட்டமாய் சொல்வதென்றால், அவையெல்லாம் அச்சத்தின் வட்டங்கள்.

இருப்பது போதும் என்ற எண்ணம், மனிதனின் இருப்புக்குத் துணை செய்யுமே தவிர வாழ்க்கையை வாழ்வதற்கல்ல.

வாழ்க்கை தந்திருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, தட்டியோ முட்டியோ திறக்க வேண்டிய வாசல்கள் எவ்வளவு, அப்படித் திறப்பதால் ஏற்படும் மனநிறைவு எவ்வளவு மகத்தானது என்பதையெல்லாம் இந்த அச்ச வட்டத்திற்குள் இருக்கும் வரை அணுவளவும் அனுபவிக்க முடியாது.

நிம்மதியான வாழ்க்கை என்ற பெயரில் பலரும் நின்றுவிடுகிற எல்லையில்தான், நிறைவான வாழ்க்கைக்கான தேடல் தொடங்குகிறது.

நம்மில் பலருக்கும் இருக்கும் பொதுவான நம்பிக்கை என்னவென்றால், செல்வந்தர்கள் சொகுசாக வாழ்வார்கள். ஏழைகள் எப்போதும் சிரமப்படுபவர்கள் என்பதுதான்.

ஆனால் பெரும் பாலான செல்வந்தர்கள், தங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்ததால் வளர்ந்தவர்கள்.

ஒரே மாதிரியான சராசரி வாழ்க்கையில் சலிப்படைந்து மாற்றங்களை விரும்பியவர்கள், வசதி குறைந்தவர்களில் பலர் பெரும்பாலும், வாடகைக்கு, வீட்டு செலவுகளுக்கு, குழந்தைகளின் கல்விக்கு என்று மட்டும் சம்பாதித்து அதிலேயே சமாதானமாகி விடுவார்கள்.

இதற்காகவே “பொறுப்பான குடும்பத் தலைவர்” என்ற பெயரும் அவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த வட்டத்திற்குள் இறுதிவரை உழன்று கொண்டிருந்தால் வளர்ச்சி இல்லை என்பதை உணர்ந்து வெளியே வந்தவர்களே வெற்றியாளர்கள்.

பொருளாதார வெற்றியைப் பெற்றவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள்.

பொருளாதார வெற்றி பெறாதவர்களும் கடைசிவரை உழைக்கிறார்கள்.

இதில் என்ன வேறுபாடென்றால், பொருளாதாரத்தில் வெற்றி பெற்றவர்கள் திறமையாக உழைக்கிறார்கள்.

தங்கள் திறமையை துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே முழுமையான வெற்றி சாத்தியப் படுகிறது.

இப்படியே இருந்தால் எப்படி என்கிற எண்ணம் எப்போது உங்களுக்கு ஏற்படுகிறதோ, அப்போதே நீங்கள் வளரத்தொடங்கி விட்டதாக அர்த்தம். வட்டங்களை விட்டு வெளியே வர சில வழிகளும் இருக்கின்றன.

1. இருப்பது போதும் என்று உங்களை நீங்களே சமரசத்திற்கோ சமாதானத்திற்கோ உட்படுத்திக் கொள்ளாதீர்கள்.

2. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரும் குறுக்கு வழியில் சம்பாதித்த வர்கள் என்ற தவறான முடிவுக்குத் தள்ளப் படாதீர்கள்.

3. புதிதாக எதையாவது முயன்று பார்க்க வேண்டும் என்கிற ஆசை உங்களுக்குள் தீவிரமாக இருந்தால் அதைத் தடுக்காதீர்கள்.

4. புதிய முயற்சிகளில் ஏற்படும் சின்னச் சின்ன நஷ்டங்களையோ தோல்விகளையோ பொருட்படுத்தாதீர்கள்.

இப்படியே இருக்கப் பிறந்தவர்கள் அல்ல நாம். எப்படியாவது முன்னேறப் பிறந்தவர்கள் நாம். இந்த எண்ணத்தில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.
- சிநேகலதா
++++++++++++++++++++
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

“நக்கீரன்"- பொய் வ‌ழ‌க்கு .நிரபராதியின் 13 வருட சிறை. அனுபவம்! பேட்டி.

>> Monday, May 31, 2010

"கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்."

என் மீது பொய் வழக்குகள் போட்ட உயரதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள். அவர்களை சபிக்க நான் விரும்பவில்லை. இன்று நாங்கள் விடுதலையாகி விட்டோம். இதனை அவர்கள் அறிந்திருப்பார்கள். மன சாட்சி இருந்தால் அவர்கள் கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்.

13 வருட சிறை அனுபவம்! மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா!
நக்கீரன் வாரமிருமை இதழுக்கு அளித்த பேட்டி

சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார் குணங்குடி அனீஃபா.

பா.ம.க.வின் பொருளாளர், பழனி பாபா உருவாக்கிய அகில இந்திய ஜிகாத் கமிட்டியின் தலைவர், த.மு.மு.க.வின் தலைவர் என்கிற பல்வேறு அடையாளங்கள் இவருக்கு உண்டு.

ரயில் குண்டு வழக்கில் ஜாமீனே கிடைக்காமல் 13 வருடங்கள் சிறையில் இருந்த அனீஃபாவை கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது பொடா நீதிமன்றம். இவரது விடுதலைக்காக தொடர்ந்து போராடிய முஸ்லிம் இயக்கங்களும் முஸ்லிம் சமூகமும் இந்த விடுதலையை கொண்டாடுகின்றன.

இந்தச் சூழலில், பேத்தியுடன் கொஞ்சிக்கொண்டிருந்த அனீஃபாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.

பதிமூன்று வருஷங்களுக்கு முன்பு நீங்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்னும் உங்கள் நினைவுகளில் இருக்கிறதா?

மறந்துவிடுகிற சம்பவமா அது? இன்று நினைத்தாலும் காவல்துறை மீது கோபம் கோபமாகத்தான் வருகிறது. ஆனா, மனசு பக்குவப்பட்டுவிட்டதால் அந்தக் கோபம் அமைதியாகிவிடுகிறது.

தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடி கிராமம்தான் என் சொந்த ஊர். இங்குள்ள என் வீட்டில் எனது ஒரே மகளின் திருமணம் 15.2.98 அன்று வெகு விமரிசையாக நடந்தது.

அப்போது நுழைந்த தேவகோட்டைபோலீஸார், "கோவை வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துப் போய் கோவை வெடிகுண்டு சம்பவத்தில் சதி ஆலோசனையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து என்னை கைது செய்தனர்.

இந்த வழக்கிற்காக திருச்சி மற்றும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்துகொண்டு சதி ஆலோசனையில் ஈடுபட்டபோது நான் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், எனது மகளின் திருமணத்தில்தான் கைது செய்யப்பட்டேன் என்கிற வீடியோ ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பித்தோம்.

இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த நீதிபதி என்மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்று கூறி என்னை விடுதலை செய்தார்.

அதேசமயம், இந்த வழக்கில் என்னைக் குற்றவாளியாக கோர்ட்டில் நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த போலீஸார், இந்த வழக்கிற்காக சிறையில் நான் இருந்தபோதே திருச்சி, ஈரோடு, ஆலப்புழை ஆகிய 3 இடங்களில் நடந்த ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தை என்னோடு இணைத்து அதில் கைது செய்தனர். அந்த வழக்குதான் 13 வருடங்களாக நீடித்து... இப்போது விடுதலையாகியிருக்கிறேன்.

13 வருடங்களாகவே ஜாமீனே கொடுக்கப்படாத இந்த வழக்கில், நீங்கள் குற்றமற்றவர் என்பதை எப்படி நிரூபித்தீர்கள்?

இந்த வழக்கில் எனக்கு எதிராக பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் முகமது அலி, தாஸ் என்கிற 2 பேரை ஐ விட்னஸாக முன்னிறுத் தியது போலீஸ். 8 பேரை வைத்துக்கொண்டு நான் சதி ஆலோசனை நடத்தியதாகவும் அதனை இந்த 2 பேரும் கவனித்த தாகவும் போலீஸ் தரப்பில் புனையப்பட்டிருந்தது.

ஆனால், இறுதிகட்ட விசாரணையில் போலீஸின் இந்த 2 சாட்சிகளும் "அனீஃபாவை நாங்கள் பார்த்ததே இல்லை. போலீஸ் நீட்டிய கடிதத்தில் கையெழுத்திட்டோம். அவ்வளவுதான்' என்று பகிரங்கமாகவே உண்மையை ஒப்புக்கொண்டனர். போலீஸாரின் பொய் வழக்கிற்கு என் மீதான வழக்கின் தீர்ப்பு ஒரு நெத்தியடி.

இந்த வழக்கு தொடர்பாக சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தீர்களே?

உண்மைதான். பொடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தபோது, வழக்கை விரைந்து முடிக்க போலீஸ் நினைக்கவே இல்லை. வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கான தேதி குறிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகும் நிலையில் நீதிபதி மாற்றப்பட்டுவிடுவார்.

இதுவரை 8 நீதிபதிகள் இப்படி மாறிவிட்டனர். பொடா கோர்ட்டின் தற்போதைய நீதிபதி பிரேம்குமார், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு தேதியை குறித்தார். ஆனால், இதனை விரும்பாத காவல்துறையினர், நீதிபதியை மாற்ற முயற்சித்தனர்.

இதனைக் கண்டித்து சிறையினுள்ளே உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினோம். அனைத்து சிறைவாசிகளும் எங்களுக்கு ஆதரவாக நின்றனர்.

அதே சமயம், இந்த மாதம் 5-ந் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி... பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் த.மு. மு.க.வினர் கோர்ட்டை முற்றுகையிடும் போராட்டத்தை பெரிய அளவில் நடத்தினர்.

இதன் விளைவாக, சிறைத்துறை அதிகாரிகள், "நீதிபதியை மாற்றமாட்டோம்னு நீதித்துறை உத்திரவாதம் தந்திருக்கிறது. போராட்டத்தை கைவிடுங்கள்' என்றனர்.

அதனை ஏற்று உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டோம். இந்த மாதம் 21-ந் தேதி "இந்த வழக்கில் ஒரு குற்றச்சாட்டைக் கூட போலீஸ் தரப்பு நிரூபிக்கவில்லை. எந்த ஆதாரத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை' என்று கூறி நீதிபதி விடுதலை செய்தார்.

இந்த 13 வருட சிறைவாசத்தில் ஏற்பட்ட அனுபவங்கள்?

மிக திடகாத்திரமான உடலுடன், மனத் தைரியத்துடன் சிறைக்குச் சென்றேன். ஆனால், இன்றைக்கு ஊன்றுகோல் உதவியில்லாமல் நடக்க முடியாது என்கிற நிலையில் வெளியே வந்திருக்கிறேன்.

காரணம் 13 வருடங்களாக எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்தான். எனக்கு எந்த நோயும் இருந்ததில்லை. ஆனால், இப்போது ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய், முதுகுத்தண்டு தேய்மானம், கண் பார்வை கோளாறு என அனைத்தும் இருக்கிறது.

மன உளைச்சல்கள் தந்த பரிசு இது. எந்தத் தவறுமே செய்யாமல் தண்டிக்கப்படுகிறோமே என்கிற மன உளைச்சல்கள்தான்.

என்னை சிறையில் சந்திக்க என் மனைவி ஹமீதாபீவி வருவார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் "கணவன் உயிரோடு இருந்தும் விதவையாக இருக்கிறாளே' என்று நெக்குருகிப் போவேன். இந்தக் கவலையும் என்னை மன நோயாளியாக்கியது. இஸ்லாத்தில் தற்கொலைக்கு இடம் கிடையாது. அதனால், தற்கொலை எண்ணத்தில் இருந்து இறைவனால் தடுக்கப்பட்டேன்.

சிறைகளில் உங்களின் நாட்கள் எப்படிக் கழிந்தது?

இந்த 13 வருடங்களில் 5 வருடங்கள் மதுரை மத்திய சிறையிலும், 5 வருடங்கள் சென்னை பழைய மத்திய சிறையிலும், கடைசி 3 வருடங்கள் புழல் மத்திய சிறையிலும் இருந்தேன். மதுரை சிறைச் சாலையை கொடுஞ்சாலை என்றுதான் வர்ணிக்க வேண்டும். அந்தளவுக்கு இருந்தது அந்த சிறைச்சாலை.

காலைக்கடன் கழிக்க வும் குளிக்கவும் ஒரு அரைமணி நேரம் தருவார்கள். அதன் பிறகு சாப்பிடுவதற்கு 15 நிமிடம்... அவ்வளவுதான்! பிறகு ஒரு சிறிய அறையில் போட்டு பூட்டி விடுவார்கள். மதியம் சாப்பாடு வாங்க அரை மணி நேரம். அதேபோல சாயந்தரம். இதைத்தாண்டி வெளிக் காற்றே சுவாசிக்க முடியாது. எவரிடமும் பேசக்கூடாது. பேசினால்... ஒருமையில் திட்டுவார்கள். சாப்பிடுகிற நேரத்தைத் தவிர, தாகத்திற்கு ஒருவாய் தண்ணீர் கேட்டால்கூட அவ்வளவு எளிதாக கிடைக்காது. இதே நிலைதான் சென்னை மத்திய சிறையிலும் இருந்தது.

சிறைவாசிகள் என்பவர்கள் "அடிமைகள்' என்பதுதான் அதிகாரிகளின் பார்வை. புழல் சிறையில் இங்கு கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. அதாவது, சிறைவாசிகளுக்கு மின்விசிறி ஏற்பாடு செய்திருந்தார் முதல்வர் கலைஞர். மன உளைச்சலில் இருந்த என்னைப் போன்றவர்களுக்கு மனப் புழுக்கத்தை போக்கியது இந்த மின்விசிறிகள்.

நான் இருக்கும் பகுதிக்கு பாதுகாப்பு தொகுதி-1 என்று பெயர். இதனைச் சுற்றி சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் காலி இடம் இருக்கு. இதனை பசுமையாக வைத்துக் கொள்ள விரும்பி சிறைத்துறையிடம் அனுமதி கேட்டபோது ஒப்புக் கொண்டனர்.

இந்த நிலத்தில் 10 பலா கன்றுகள், 10 மாங் கன்றுகள், 25-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள், 25 வேப்பங் கன்றுகள் மற்றும் செடி-கொடிகளை நட்டு வைத்திருக்கிறேன்.

பகல் நேரங்களில், எங்கள் தொகுதியில் அடைக்கப்பட்டிருந்த 15 சிறைவாசிகளுக்கும் பசுமை நிலப்பரப்பில் உலாவ அனுமதி கிடைக்கும். அப்போதெல்லாம், நான் நட்டு வைத்த கன்றுகளுடனும், செடி-கொடிகளுடனும் பேசிக் கொண்டிருப்பேன். மன உளைச்சலில் தவித்து நோயாளியாகி விட்ட எனக்கு, இதுதான் மருந்தாக இருந்தது.

அதே நேரத்தில் 400 சிறைவாசிகளுக்கு 1 டாக்டர் இருக்க வேண்டுமென்கிறது விதி. ஆனால், 2000 சிறைவாசிகளுக்கும் 2 டாக்டர்கள்தான் இருக்கின்றனர்.

இதனால் நோய்களில் அவதிப்படுவது அதிகரிக்கிறது. ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள் வந்தால் உடனடியாக வெளி மருத்துவமனைக்கு சிறைவாசிகளை அழைத்துப் போக வேண்டும். இதற்கான உடனடி வசதிகள் சிறையில் இல்லை. காவல்துறைக்கு தகவல் கொடுத்து, அவர்கள் ஆக்ஷன் எடுப்பதற்குள் சிறையிலேயே நோயாளி இறந்து விடுகிறார்.

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்று நிறைய பிரச்சினைகளை அனுபவப்பூர்வமாக பார்த்திருக்கிறேன். சிறை வாழ்க்கையை பற்றி உணர்வுப்பூர்வமாக அனுபவித்த கலைஞர்தான், சிறைத்துறையை சீர்படுத்த முடியும். அவரை விட்டால் வேறு யாரும் இதனை செய்ய மாட்டார்கள்.

சிறையிலிருந்து விடுதலை பெற்று விட்டீர்கள். த.மு.மு.க.வின் அரசியல் கட்சியான ம.ம.க.வின் தலைவராக நியமிக்கப்படுவீர்கள் என்கிற பேச்சு எதிரொலிக்கிறதே?

நான் சிறைக்கு செல்லும்போது, கொள்கைகளுக்கு மக்களிடம் மரியாதை இருந்தது. ஆனால், இன்றைக்கு கொள்கைகள் பின்னுக்கு தள்ளப்பட்டு வேறு சில அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிற அளவுக்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது.

இந்த சூழலில் தீவிர அரசியலில் ஈடுபட மனது விரும்பவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னால் துவக்கப்பட்ட த.மு.மு.க., இன்று பொது பிரச்சினைகளில் மனித நேயத்துடன் மிகவும் வலிமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பேராசிரியர் ஜவாஹிருல்லா பொது வாழ்வில் நேர்மையானவராகவும், தூய்மை யானவராகவும் இருக்கிறார். அதனால், அவரது தலைமையை ஏற்று, த.மு.மு.க. மூலம் சமூக பணி செய்யவே விரும்புகிறேன்.

அதேசமயம், த.மு.மு.க. தலைமை என்ன வேலைத்திட்டம் கொடுத்தாலும் அதை செய்ய வேண்டியது என் கடமை. அது அரசியலாக இருந்தாலும் கூட.

உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய காவல்துறை உயரதிகாரிகள் குறித்து?

என் மீது பொய் வழக்குகள் போட்ட உயரதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள்.

அவர்களை சபிக்க நான் விரும்பவில்லை. இன்று நாங்கள் விடுதலையாகி விட்டோம். இதனை அவர்கள் அறிந்திருப்பார்கள். மன சாட்சி இருந்தால் அவர்கள் கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்.

-சந்திப்பு: இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்
நன்றி: "நக்கீரன்"
***********************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்.உங்களால் முடியும்.கலக்குங்கள்.

>> Thursday, May 27, 2010

பாறைகள் குவிந்து கிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களின் தன்மைக்கேற்ப கலைக்கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது.வெற்றி இரண்டு விதம் . ஆலோசித்து பயனடையுங்கள்.

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒரு விதம்.

மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்.

ஆள்நடமாட்டமில்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிட.ம், சிலர் கண்களில் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குறிய இடமாகத் தெரிகிறது.

மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில் என்னவாக இருக்கிறது என்பதல்ல முக்கியம்.

எதிர்காலத்தில் என்னவாக வளரும் என்பதுதான் முக்கியம். வாய்ப்புகள் வழியில் வரும்வரை காத்திருக்காமல், விலகிச் செல்லும் வாய்ப்புகளைக்கூட வழிமறித்துப் பயன்படுத்தும் துடிப்பு இருந்தால் இத்தகைய புதுமைகள் புத்தியில் உதிக்கும்.

இப்படிப் புதுமையாய் சிந்திப்பதில் முதல்தடை… விமர்சனங்கள். ஆர்வமாய்ப் புதிய விஷயங்களைச் சொல்ல வருபவர்கள்கூட, விமர்சனங்கள் வந்ததும் துவண்டுவிடுவார்கள்.

அதனால்தான் ஓர் அறிஞர் சொன்னார், “புதுமையாய் சிந்திக்க அறிவு மட்டும் போதாது, துணிவும் அவசியம்” என்று.

சமுத்திரம் என்பது குடிக்கப் பயன்படாத தண்ணீர் என்று பார்த்து ஆதிகாலத்தில் அநேகம்பேர் அலட்சியம் செய்திருப்பார்கள்.

அதில் உப்பு இருக்கிறது என்று ஒருவன் முதலில் கண்டுபிடித்திருப்பான்,

முத்து கிடைக்கிறது என்று இன்னொருவன் கண்டுபிடித்திருப்பான்.

மீன் பிடித்துச் சாப்பிடலாம் என்று மற்றொருவன் கண்டுபிடித்திருப்பான்.

காலகாலமாய் இருக்கிற கடல், தேவையில்லாத தண்ணீர்ப்பரப்பு என்று விலகி நடக்காமல் வித்தியாசமாய்ச் சிந்தித்தவன்தான் இந்தப் புதுமைகளையெல்லாம் பூமிக்குக் கொடுத்தான்.

இந்தப் புதுமைக் கண்ணோட்டம் என்பது, பணம் சம்பாதிக்கும் முறை என்று மட்டும் பார்த்தால், வளர்ச்சி இருக்காது.

புதுமைக் கண்ணோட்ட வழிகள் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்கிற முறை. அதுவே ஒரு வாழ்க்கை முறை.

கண்ணில்படுகிற எதிலும் எண்ணிலடங்காத வாய்ப்புகள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை இதற்கான முதல் தேவை. சாதாரணமான ஒன்றைக்கூட சுவாரசியமாய் மாற்றுகிற படைப்பாற்றல் இதற்கான இரண்டாவது தேவை.

படைப்பாற்றல் என்கிற கண்ணுக்குத் தெரியாத சக்திக்கு சொல்வடிவம் கொடுக்கிற திறமை, இதற்கான மூன்றாவது தேவை. ஒன்றை சுவாரசியமாக சிந்தித்து, செயல்படுத்தும் வரையில் பின்வாங்காத முயற்சியும் உழைப்பும் நான்காவது தேவை.

இந்த அம்சங்களை யாரெல்லாம் வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், அதிசயமான வெற்றிகளை அனாயசமாகப் பெற்று விடுகிறார்கள்.

உங்களுக்குள் ஒரு தீப்பொறி இருந்தால், ஊதி ஊதி வளர்க்க வேண்டியவர் நீங்கள்தான். அது பெருநெருப்பாக உருவம்பெறும்வரை உங்களால் தான் அதைக் காப்பாற்ற முடியும்.

அதுவரையில் அதன் வெளிச்சம் ஊருக்குத் தெரியாது.

உங்களுக்குள் உதிக்கிற புதிய கண்ணோட்டங்கள் ஒவ்வொன்றுமே அத்தகைய தீப்பொறிகள்தான்.

உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்

உங்களால் முடியும்…. கலக்குங்கள்.- சினேகலதா
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

அதிர்ஷ்டத்தின் திறவுகோல்கள் பன்னிரண்டு. TWELVE KEYS FOR LUCK.

>> Wednesday, May 26, 2010

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா? இந்த அதிர்ஷ்டத்திற்கான காரணம்? ஜாதகமா? வாஸ்துவா? அதிர்ஷ்ட எண்களா? அதிர்ஷ்ட கற்களா?
அதிர்ஷ்டத்தின் மூலம் எங்கே? அதை அடையும் வழி எங்கே? ஒவ்வொரு மனிதனும் தேடித் தேடி அலைகிறான். ஆனால் ஏதோ சிலர் வாழ்வில் மட்டுமே அது முகம் காட்டுகிறது.

“எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது”- ஷிவ்கரோ1.

1.பொறுத்திருக்க வேண்டும்:
அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம்? நாம் தொட்டதெல்லாம் துலங்க வேண்டும், தோல்வி என்ற வார்த்தையே வாழ்வில் தொல்லை தரக்கூடாது.

ஓடு தளத்தில் ஓடி, வானத்தில் ஏறிய விமானம் சுமாராக பத்து நிமிடங்களுக்குள் தான் அடைய வேண்டிய உயரத்தை அடைந்துவிடுவது போல வாழ்வில் தான் விரும்பும் உச்சத்தை சில மாதங்களில் அடைந்துவிட வேண்டும் என விரும்புகிறோம். அதையே அதிர்ஷ்டம் என போற்றுகிறோம்.

அதிர்ஷ்டம் யாருக்கும் வரலாம்! அதற்கான வரத்தை இறைவன் நமக்குத் தரலாம்! ஆனால் அதற்கான தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும்.

சிலர் ஒரே நாளில் வாழ்வின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாம் வியக்கிறோம். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைய பல வருடங்களாக, நீங்கள் தூங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு இரவிலும் அவர்கள் கொட்ட கொட்ட கண் விழித்திருந்து தங்களை தாங்களே தயார் செய்து கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா?- லாங் பெல்லோ

2. உயர்வு உள்ளல் (Self Esteem)
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு
- திருக்குறள்

நீரின் மட்டம் எத்தனை உயரமோ அந்த அளவு உயரமான அதில் பூத்திருக்கும் தாமரைத் தண்டின் உயரம். அது போல மனிதனின் எண்ணங்களின் உயர்வுக்கு ஏற்ப அவனது வாழ்வின் உச்சமும் அமைகிறது.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய சில அளவீடை பெற்றிருக்கிறான். அவனது ஆழ் மனத்தில் அவனைப் பற்றிய சில வரையறைகள் சில அகல உயர நீளங்களை அளவீடாக உருவாக்கி இருக்கிறான்.

அதுவே அவன் தன்மதிப்பு, அதுவே அவன் தன்நிலை. அந்த அவனது சிகரத்தை தாண்டி அவன் அதற்கு மேலே செல்வதில்லை. வெறும் செல்வ வளம் மட்டமல்ல, சமுதாயத்தில் மனிதனது அங்கீகாரம், பொலிவான தோற்றம், உடல்நலம் யாவும் அந்த தன்மதிப்பை பொறுத்து அமைகிறது.

போர்க்களத்தில் போரிடும்போது மாவீரன் நெப்போலியன் நெஞ்சில் சில குண்டுகள் பாய்ந்துவிட்டன. அவனின் நெஞ்சை கீறி அதிலுள்ள குண்டுகளை மருத்துவர் அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது நெப்போலியன் கூறுகிறான். “டாக்டர் இன்னும் கொஞ்சம் ஆழமாக போய் என் இதயத்தை திறந்து பாருங்கள். அங்கே நான் காணும் பிரஞ்சு சாம்ராஜ்யத்தை நீங்களும் காணலாம்” என்றான்.

அவனது உள்ளத்தின் ஆழத்தில், அவனது ஆழ் மனதில், அவரது லட்சிய கனவுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதுவே அவனது சிகரம். அந்த கனவால் ஏற்பட்ட உக்கிரமான ஆசை அவனை ஆட்டிப் படைத்தது.

ஜுலியஸ் சீசர் என்ற ஆங்கிலப் படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான எலிசபெத் டெய்லர் கிளியோபாட்ராவாக நடித்தார். அப்போது அவருக்கு பல லட்சம் மதிப்புள்ள அணிகலன்கள் (தேவை என்று நினைப்பதற்கும் கூடுதலான அணிகலன்கள்) அணிவிக்கப்பட்டன.

அப்போது சிலர் படத்தின் இயக்குநரிடம் ஏன் இத்தனை நகைகள், இவைகள் படத்தில் தெரியவா போகிறது, படத்தில் அவைகளின் மதிப்பு பார்க்கும் ரசிகர்களுக்கு புரியவா போகிறது என்றார்களாம்.

அப்போது இயக்குநர் கூறுகிறார், பார்க்கும் ரசிகர்களுக்கு அதன் மதிப்பு தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் கிளியோபாட்ராவாக நடிக்கும் எலிசபெத் டெய்லருக்கு அதன் மதிப்பு தெரியுமல்லவா? அதன் மூலம் அந்த பாத்திரத்தின் மிகப்பெரிய மதிப்பு அவருக்கு புரியுமல்லவா?

அப்படி கிளியோபாட்ராவின் அளவிலா பெருமையை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டால் அதற்கு ஏற்ப தன் நடிப்பை கம்பீரமாக வெளிப்படுத்துவார் அல்லவா? என்றாராம்.

நமது உடலின் செல்களில் உள்ள டி.என்.ஏ.யில் நம் உடல் அமைப்பைப் பற்றி வரை படம் உள்ளது. அது போல நமது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு வரைபடம் பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த பதிவுகளில் மாற்றம் செய்யும்போது அதற்கு ஏற்ப அவரவர் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன.

3. வெற்றி மனப்பான்மை:
“பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்பது பழமொழி.

இதை நேர்மறையாக மாற்றினால் பணம் கொட்டும் இடத்தில் மேலும் மேலும் கொட்டும், வெற்றி மேலும் மேலும் வெற்றியையும், தோல்வி மேலும் மேலும் தோல்வியையும் இழுத்துக் கொண்டு வரும்.

நாம் பெறும் மிகச் சிறிய வெற்றிகூட நமக்கு வெற்றி மனப்பான்மையை உருவாக்குகிறது. அந்த வெற்றி மனப்பான்மை மேலும் பல வெற்றிகளை உருவாக்குகின்றன. அது போலவே தோல்வி, தோல்வி மனப்பான்மையை உருவாக்கி தோல்வியை இழுத்து வருகிறது.

பல வெற்றிகளை குவித்த வெற்றி வீரர்களின் முகத்தில் அந்த வெற்றியின் ரேகைகள் படர்ந்திருக்கின்றன என்கிறார் எமர்சன்.

அந்த வெற்றி ரேகைகள், அந்த வெற்றி நோக்கு மேலும் மேலும் வெற்றிகளை ஈர்க்கின்றன.

ஆக நாம் மிகுந்த முயற்சி எடுத்து வாழ்வில் சில வெற்றிகளை உருவாக்கிவிட்டால், அந்த வெற்றி தேவதை மேலும் பல வெற்றிகளை நம்மிடம் கொண்டு வருவாள்.

எதிர்பாராமல் சில தோல்வி நேர்ந்துவிட்டால் சற்று ஓய்வு எடுத்து நன்றாக சிந்தனை செய்து சில சிறிய காரியங்களை கையில் எடுத்து சிரத்தையோடு செயலாற்றி சில வெற்றிகளை பற்றிக் கொண்டுவிட்டால் அப்போது மீண்டும் வெற்றி முகம் காட்டும். அந்த வெற்றிகள் மூலம் அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.

4. மகிழ்ச்சியான மனநிலை:
“வாழ்வு வருங்கால் வராது கண் தூக்கம்” என்பது பழமொழி. மழைக்கு முன் குளிர்ந்த காற்று வீசுவது போல முன்னேற்றம் வருவதற்கு முன் ஓர் உற்சாகமான மனநிலை வந்துவிடும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. இது செயல் விளைவு தத்துவம் (Cause and Effect) என அழைக்கப்படுகிறது. வெற்றியின் விளைவு மகிழ்ச்சி.

காற்று வீசினால் காற்றாடி சுற்றுகிறது. காற்றாடி சுற்றினாலும் காற்று வீசுகிறது.

அதுபோல வெற்றி மகிழ்ச்சியை தருகிறது என்பது உலக விதி. மகிழ்ச்சியான மனநிலை வெற்றியை ஈர்க்கிறது என்பது ஆன்மீக விதி.

ஒரு வெற்றிக்காக இறைவனை வேண்டிய பின் அது கிடைத்தது போன்ற பாவனை செய்யுங்கள். அந்த வெற்றி கிடைத்த உடன் எத்தனை மகிழ்ச்சியோடு இருப்பீர்களோ அத்தனை மகிழ்ச்சியோடு இப்போதே இருங்கள். அந்த மனநிலை வெற்றியை இழுத்துக் கொண்டு வரும் என்பது ஆன்மீக ஞானிகளின் அறிவுரையாகும்.

மகிழ்ச்சியான மனநிலை வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.

5. செயல் இன்றி பலன் இல்லை:
செல்வம் வேண்டும், வாழ்வு செழிக்க வேண்டும், வான்புகழ் பெற வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று வாயால் பேசிக் கொண்டிருந்தால் போதுமா?

படிக்க வேண்டிய நேரங்களில் முயற்சி செய்து படித்தால் மதிப்பெண் வரும் காலங்களில் அதன் பலன் கை மேல் கிடைக்கும்.
செய்யும் செயலை நன்றாக செய்தால் அதற்கான பலன் நம்மை தேடிக்கொண்டு வரும்.

நிழலை நோக்கிச் சென்றால் நிழலை பிடிக்க முடியுமா? ஒளியை நோக்கிச் சென்றால் நிழல் நம் பின்னால் வரும்.

“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை”-
திருக்குறள்

எங்கே ஊக்கமும் அதன் பலனான விடாமுயற்சியும் இருக்கிறதோ, அங்கே செல்வம் வழி கேட்டுக்கொண்டு வரும். யாரிடம் விடா முயற்சி இருக்கிறதோ அவனிடம் இறைவனின் அருள் இருக்கிறது. அங்கே வெற்றி தேவதை வசிக்கிறாள்.
“முயலும் வரை முயல்வதல்ல முயற்சி
முடியும் வரை இடைவிடாமல் முயல்வதே முயற்சி”-
எங்கோ கேட்டது

எங்கே இந்த விடா முயற்சி இருக்கிறதோ, அங்கே அதிர்ஷ்ட வாசல் திறந்து கொள்கிறது.

6. தரம் வளம் தரும் (சமரசம் செய்யாத தரம்)
“நிறைய வேலை செய்யாதீர்கள், ஆனால் நிறைவாக வேலை செய்யுங்கள் குறைவாக வேலை செய்யுங்கள், ஆனால் குறையில்லாமல் செய்யுங்கள்.”

அமைதியான மனதுடன் தெளிந்த சிந்தனையுடன் மிகுந்த நம்பிக்கையுடன் முக மலர்ச்சியுடன் அளவில்லா ஆர்வத்துடன் செய்யும் காரியங்கள் சிறக்கின்றன. சாதனைகளாகின்றன.

அநேகர் இந்த சம்பளத்துக்கு இந்த வேலை போதும், இந்த மனிதர் கொடுக்கும் பணத்துக்கு இந்த அளவு வேலை செய்தால் போதும் என்று தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள். இப்படி செய்வதால் அவர்களது தரம் தானாக கீழே இறங்குவதை அவர்கள் அறிவதில்லை.

ஆரம்ப காலங்களில் ஊதியம் குறைவாக இருந்தாலும், அதனால் நாம் சிரமப்பட்டாலும் தப்பில்லை. நம் தரம் மட்டும் எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது.

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு இசை அமைக்கும் முன் விளம்பரங்களுக்கு இசை அமைத்தார். சின்ன விளம்பரம் தானே என்று நினைக்காமல் அதையும் சிறப்பாக செய்தார். அந்த சிறிய விளம்பரங்களில் தன் முத்திரையை பதித்தார். அது மிகச் சிறப்பாக இருப்பதை கண்டு மணிரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் அவர் தன் தளரா முயற்சியில் உலகளாவிய சாதனை படைக்கிறார்.

சரவண பவனில் ஆரம்ப காலங்களில் கையைக் கடித்தாலும் பரவாயில்லை என்று குறைந்த விலைக்கு உணவுகளை வழங்கிய போதுகூட சுவையிலும் சுத்தத்திலும் எந்த குறையும் வைக்கவில்லை. இதனால் ஆரம்ப காலங்களில் அவருக்கு தினமும் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. காலம் செல்ல செல்ல சரவண பவனின் சுத்தமும், சுவையும் யாவரையும் கவர்ந்தது. இன்று அதன் சாதனை உலகளாவியது.

ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி செல்டன் (Jeffery Archer, Sydney Sheldon) போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை சுமாராக ஏழு தடவையில் இருந்து பதினான்கு தடவைகள் மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுவார்களாம். அதனால் அவர்கள் கதைகள் சிறப்புற்று விளங்குகின்றன.

சில வேளைகளில் நம் செயல்கள் சிறப்பாக இருந்தாலும் சாமானியர்கள் அதன் மதிப்பை உணராதவர்களாக இருப்பார்கள்.

வைரத்திற்கும் சாதா கற்களுக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள முடியாத மாறுபட்ட மனிதர்கள் மத்தியில் நாம் அறிந்து கொள்ளப்படாமல் இருக்கலாம், உயர்த்தப் படாமல் இருக்கலாம்.

ஆனால் வைரத்தின் தன்மைகளை அறிந்த வைர வியாபாரியின் கண்களில் நாம் படும்போது உண்மையான நிலைக்கு உயர்த்தப்படுவோம். அந்த நாளில் நாம் வைரம் போல் ஜொலிப்போம். அதுவரை பொறுமையாக உழைத்து காத்திருப்போம். அப்போது அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்துகொள்கின்றன.

7. பயனில செய்யாமை:
நாம் எந்தச் செயலைச் செய்தாலும் எதைப் பற்றி பேசினாலும் அதன் மூலம் நமக்கோ பிறர்க்கோ சமுதாயத்திற்கோ ஒரு நன்மையாவது இருக்க வேண்டும்.

நமது கையின் ஒரு விரலை நீட்டினாலும், மடக்கினாலும்கூட அதற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.

ஒரே ஒரு வார்த்தை பேசினாலும் கூட அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும்.

ஓர் எண்ணத்தை மனதினால் எண்ணினால்கூட அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும்.

ஓர் எண்ணத்தை மனதினால் எண்ணினால் கூட அதற்கு ஒரு பொருள் இருக்க வேண்டும்.

பயனற்ற செயல்கள், பயனற்ற வீண் உரையாடல்கள், பயனற்ற சிந்தனைகள் இம்மூன்றும் நம் நேரத்தை நம் சக்தியை வீணடிக்கின்றன.
Watch your WAT (Words, Action and Thoughts)

நமக்கு சம்பந்தம் இல்லாத வெட்டியான அரசியல், கிரிக்கெட், சினிமா, அண்டை வீட்டார் பற்றிய கிசுகிசுக்கள் இவைகளை பற்றிய விஷய ஞானமும் இவைகள் பற்றிய உரையாடல்களும் நமது பொன்னான நேரத்தை மண்ணாக்கிவிடுகின்றன.

அநேகருக்கு தங்கள் வருமானத்தைக் கூட்டுவது சம்பந்தமான சிந்தனையோ, தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்ப நலன் பற்றிய எண்ணமோ இருக்காது. ஆனால் சினிமாக்காரர்களின், கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும், அவர்களின் சாதனைப் பட்டியல்களும் அத்துப்படி.

நாம் எதை எதைச் செய்யவேண்டும், எதை எதைச் செய்யக் கூடாது என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.

இன்னும் சிலர் விவரம் இல்லாமல் புடம் போடப்பட்ட தெளிவான சிந்தனை இல்லாமல் பழக்கம் காரணமாக யாருக்குமே பயன்தராத ஏதேதோ செயல்களை காலம் காலமாக செய்து கொண்டிருப்பார்கள்.

தண்ணீரே வராத கடும் பாறையில் போய் கிணறு தோண்டிக் கொண்டிருப்பார்கள். நாம் ஒரு செயலைச் செய்யும் முன் நன்றாக திட்டமிட்டு தெளிவான நோக்கத்தோடு சீரிய சிந்தனையோடு செயல்பட வேண்டும்.

அப்போது அதிர்ஷ்ட வாசல் நமக்காக திறந்து கொள்கிறது.

8. இக்கரைக்கு அக்கரை பச்சை:
மாற்றான் வீட்டு மல்லிகையின் மணம் மட்டும்தான் அநேகரின் மனம் கவரும். தன் தோட்டத்து ரோஜாவின் அழகை ரசிக்கும் கண்கள் அவர்களுக்கு இருப்பது இல்லை.

நாம் வெறுப்பாக செய்து கொண்டிருக்கும் அதே தொழிலை மிகப்பெரிய வாய்ப்பாக கண்டு வாழ்வில் வெற்றி பெற்றவர் அநேகர். எந்த தொழில் சிறப்பாக இருக்கிறது என்று நாம் நினைக்கிறோமோ அதே தொழிலில் தோல்வி கண்டு தங்கள் வசந்த வாழ்வை இழந்தவர்கள் அநேகர்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அங்கும் இங்கும் அலையக் கூடாது. தான் இருக்கும் இடத்தில் பச்சையை (வாய்ப்பை) கண்டு கொள்பவன் புத்திசாலி.

9. விழிப்புணர்வு:
தங்கசாமி ஒரு முக்கியமான வேலையாக சில மைல்கள் தூரத்திலுள்ள பொன்னுசாமியை பார்க்க அவர் விட்டிற்கு மிதிவண்டியில் சென்றார். அதே வேளையில் பொன்னுசாமியும் தங்கசாமியைப் பார்க்க தங்கசாமி வீட்டிற்கு மிதி வண்டியில் சென்று கொண்டிருந்தார். வழியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளவில்லை.

இப்போது தங்கசாமி பொன்னுசாமி வீட்டிலும், பொன்னுசாமி தங்கசாமி வீட்டிலும் ஒருவருக்காக ஒருவர் இரண்டு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நினைத்தபடி சந்திக்க முடியாததால் இருவரும் ஒரே வேளையில் அவரவர் வீட்டை நோக்கி திரும்புகிறார்கள்.

வழியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள். அப்போதும் இருவரும் ஒருவர் கண்ணில் மற்றவர் படவில்லை. மீண்டும் அவரவர் வீட்டில் போய் சேர்கிறார்கள். நினைத்தபடி ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை.

நாம் அதிர்ஷ்டத்தை தேடி அலைகிறோம். அதுவோ நம்மை தேடி வருகிறது. வரும் அந்த அதிர்ஷ்டத்தை கண்டு கொள்ளும் அளவற்ற விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை. விழிப்புணர்வோடு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள் அதிர்ஷ்ட வாசலை கண்டு கொள்கிறார்கள்.

10. தீய பழக்கங்கள்:
நாம் அலட்சியமாக நினைக்கும் சில தீய பழக்கங்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சின்ன நூலிலை போல படரும் அந்த தீய பழக்கங்கள், காலப் போக்கில் நம்மையறியாமல் உடைக்க முடியாத சங்கிலிபோல வலுத்து விடுகின்றன.
தீவிர முயற்சி எடுத்து தீய பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதே அறிவுடைமை. நாம் தீய பழக்கங்களை கண்டு அஞ்சி ஓட வேண்டும். அதன் தீவிரத் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படி நாம் தீய பழக்கங்களில் இருந்து வெளியே வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு நமக்கு திறந்துகொள்கிறது.

11. எல்லாம் நன்மைக்கே:
நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரலாம், சாதகங்களும், பாதகங்களும் மாறி மாறி வரலாம். அதில் துள்ளுவதோ, துவளுவதோ கூடாது. எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பார்ப்பான் புத்திசாலி.

வெற்றியும் தோல்வியும் வீரருக்கு அழகு தோல்வியைக் கண்டு பயந்து பின்வாங்குவோரால் வெற்றிக்கனி பறிக்க முடியாது.

தோல்வி என்றால் அரை கிணறு தாண்டி இருக்கிறோம் என்பதே பொருள். அதாவது தங்கத்திற்குப் பதில் வெள்ளி கிடைத்திருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கும்போது வெற்றிக்கனி நம் கைக்கு எட்டும்.

12. தடைகள் தகர்க்கப்பட வேண்டும்:
கோழிக் குஞ்சுகள், தங்கள் சிறு அலகுகளால் தன்னைச் சுற்றியுள்ள முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு வெளிவருகின்றன.

விதைகள், தங்களை சுற்றியுள்ள தோலை கிழித்துக் கொண்டு பூமியை பிளந்துகொண்டு மேலே முளைத்தெழுகின்றன.

இலையைத் தின்றுகொண்டு ஒரே செடியில் ஊர்ந்துகொண்டு வாழும் புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கி அந்த கூட்டுக்குள் பல நாட்கள் உண்ணாமல் தவம் இருந்து, பின்பு அந்த கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே பறக்கிறது. பட்டாம்பூச்சியாக புதுப் பிறவி எடுக்கிறது.

நாம் உடைத்து வெளியேற வேண்டிய சில கூடுகள் அல்லது கோட்டைகள் என்ற தடைகள் நம் முன்னே இருக்கலாம். அவைகளை உடைத்து வெளிப்பட வேண்டும்.

எத்தனை பெரிய பலமான தடைகளை நாம் உடைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதனைகள் சரித்திரம் படைப்பதாக இருக்கும். ஆகவே என் முன்னே இருக்கும் கோட்டை பலமானதாக இருக்கிறதே, நான் தாண்ட வேண்டிய மலை மிக உயரமாக இருக்கிறதே என மனம் கலங்க வேண்டாம்.

துணிச்சலோடு மோதுங்கள். மனிதனால் தாண்ட முடியாத மலைகளோ, உடைக்க முடியாத கோட்டைகளோ உலகில் இல்லை. - தே. சௌந்தர்ராஜன்
***********************

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

நடிகர் பார்த்திபன் ஸ்வாமிகளிடம் ஏமாந்த கதை

>> Tuesday, May 25, 2010

``சார், சென்னைப் புறநகர்ல தெரிஞ்ச ஒரு சாமியார் இருக்கார். நீங்க ஒரு தடவை போய்ப் பார்த்தீங்கன்னா எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும். நிறைய மினிஸ்ட்டருங்க அவரைப் பார்த்துட்டுப் போறாங்க. ரொம்ப பவர்ஃபுல்.’’
``ஏற்கெனவே பவர்ல இருக்கிற மினிஸ்ட்டருங்க எதுக்கு அவரைப் போய் பார்க்கணும்?’’நான் கிண்டலடிக்க,

``இப்படியெல்லாம் கேட்டீங்கன்னா எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. ஒரே ஒரு தடவை நீங்களும், அண்ணியும் வந்து பாருங்களேன்.’’

சம்மதிப்பதற்கான சமாதானங்கள் தொலைக்காட்சி சீரியலாக நீள, அந்தப் புறநகர் சாமியார் இடத்தில் `ஸாரி’ மடத்தில் நாங்கள் பணிவாய்க் காத்திருந்தோம். வரும் முன் பார்ப்போம் என அந்த அறையை என் கண்கள் வட்டமிட்டதில், ஒரு சாமிப் படமும் அங்கு இல்லை. எல்லாம் அந்த சாமியார் படங்களாகவே இருந்ததில் என் புருவங்கள் இரண்டும் கேள்விக்குறியாக வளைந்தன.

ஒரு திரைப்படப் புகைப் படக் கலைஞரின் அதி அழகியல் நுட்பத்துடன் ஒவ்வொரு ஃப்ரேமும் இருந்தது.

அவரது கண்கள் மட்டும், ஒரு `8’ போல் விரல்கள் பிணைந்திருக்கும் இரு கைகள் மட்டும், காவி வேட்டிக்குள் இருந்து எட்டிப் பார்க்கும், இரண்டு கால்கள் மட்டும், புறமுதுகிட்டு அவர் அமர்ந்திருப்பது மட்டும், கடைசியாக அவரது முழு உருவம்.

எல்லாப் படங்களிலும் மலை மலையாக உதிரிப் பூக்கள் ஒட்டப்பட்டிருந்தன. தன்னைத்தானே சாமியாக வணங்கும் ஒரு சாமியாரைப் பார்ப்பது வியப்பாக மட்டும் இல்லாமல் ஏதோ ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

ஒரு தெலுங்குப் பட வில்லனின் வாசனை அந்த அறைக்குள் முதலில் நுழைந்தது. பிறகு அவர் வந்தார். ஆஜானுபாகுவாக இருந்த அவர், மைசூர் பாகுவாக இனிமையாகப் பேசினார். கேசரிப் பவுடர் போட்டுக் கிண்டியதைப் போல கண்கள் இளம் சிவப்பில் மிதந்தன.அதை மூடி வைத்து ஒரு வேக்காட்டுக்குப் பின் திறந்த படி, ``சொல்லுங்க’’ என்றார்.

`சொல்’வதற்குள் எல்லாம் எனக்குத் தெரியும். உங்களுக்கு யாரோ செய்வினை பண்ணியிருக்காங்க.’’

அதிர்ச்சி எங்களை ஆட்கொண்டது.``உங்க வீட்லயிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்துட்டு வாங்க. யார் செஞ்சதுன்னு சரியா சொல்லித்தரேன்.’’

அவர் பேச்சில் ஏதோ பிடிப்பு ஏற்பட, பிடி மண்ணுடன் மீண்டும் ஆஜரானோம். அந்த மண்ணைத் தன் உள்ளங்கையில் வைத்து, கண்ணை மூடிப் பார்த்தவர், சில நொடிகளுக்குள் `ஷாக்’ அடித்தவர் போல கை உதற, மண் சிதறியது. எங்கள் இருவரையும் மாறி, மாறிப் பார்த்தவர், ஒரு மாதிரியாகவும் சிரித்தார்.

``நெறைய வெச்சிருக்காங்க. தொழில் நாசமாக கெட்ட காரியம் பண்ணியிருக்காங்க.’’

நாங்கள் இருவரும் புதிருக்குள் விழுந்தோம்.

``யார் செஞ்சிருப்பாங்க...? ஏன் செஞ்சிருப்பாங்க...?’’
``எடுக்கலாம். ஆனா, பொதுவா நான் யார் வீட்டுக்கும் போகாது’’ என்று கூறியபடி கோழியாகி அந்த மண்ணையே கிளறிக் கொண் டிருந்தார்.

நாங்கள் கிட்டத்தட்ட கெஞ்சிய பிறகு, ஒப்புக்கொண்டார், எங்கள் வீட்டின் விஜயத்துக்கு.

அப்படி அவர் வருவதானால், நாங்கள் என்னவெல்லாம் வாங்கி வைக்கவேண்டும் என்று அவரே ஒரு `லிஸ்ட்’ எழுதிக் கொடுத்தார்.

அந்த அனுமார் வாலைச் சுருட்டி, பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, வேகமாக வெளியேறினோம். ஆனால், எங்கள் மனக்கடல் உள்வாங்கியது வருத்தத்தில்.

அவர் எங்கள் வீட்டுக்கு வரும் வரை எங்கள் கண்களும் கேசரி பவுடரைப் போட்டுக் கிண்டியதைப்போல சிவந்தே இருந்தது உறக்கமின்மையால்.

வந்தார். ``எல்லாம் ரெடியா?’’ என்றார். வழக்கமான பூஜை பொருள்களுடன் மூன்று நிறங்களில் மூன்று சாத உருண்டைகளை உருட்டி வைத்திருந்ததைக் காட்டினோம். அந்தக் குறிப்பிட்ட பூஜைக்காக குறிப்பிட்ட கறை போட்ட வேட்டியையும் வாங்கி வைத்திருந்தோம்.

காட்டிய வேட்டியைக் கட்டிக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தார். நுழையும் முன், ``அந்த கார்டன்ல மூணு அடிக்கு ஒரு குழியத் தோண்டி வைங்க. வேலைக்காரங்க வேணாம். நீங்களே தோண்டுங்க’’ என்று சொல்லிவிட்டு அந்த மூன்று சாத உருண்டைகள் உள்ள தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். முப்பது நிமிடம் கழித்து வெளியே வந்தார்.

எனக்கு நானே குழியைப் பறித்துவிட்டு, (அதாவது தனியனாக) நின்று கொண்டிருந்த என்னிடம் அந்தச் சாத உருண்டைத் தட்டை நீட்டி குழியில் போடச் சொன்னார்.

அதில் தீர்த்தம் ஊற்றி மண்ணை மூடி, சூடம் காட்டி, ``சூ.... மந்திரக்காளி’’ சொல்லி சற்று கழித்து என்னிடம் அந்தக் குழிக்குள் கையை விட்டுத் தேடிப் பார்க்கச் சொன்னார்.

சற்று நேரம் தேடிய பின், அந்த புதைபொருள் ஆராய்ச்சியில் புதைந்திருக்கும் பொருள் தெரியாமல், அண்ணாந்து அவரைப்பார்த்தேன்.

`இன்னும்’ என அவர் இமை சுருங்கி விரிந்தது. இன்னும், இன்னும் தேட விரல் இடுக்கில் ஏதோ தகடுபோல் தட்டுப்பட்டது. வெளியில் எடுத்து அவரிடம் நீட்டினேன். அவரும் பழிக்குப் பழியாகத் தண்ணீர் இருந்த ஒரு பாத்திரத்தை என்னிடம் நீட்டினார்.

அதில் போட்டு விட்டு, இன்னும் தேடி, இன்னும் இன்னும் போட்டேன். பாத்திரம் நிறைய செம்புத் தகடுகள் புழுவாய் நெளிந்தன.

ஒட்டியிருந்த மண்ணை எல்லாம் துடைத்து விட்டு என்னை அதைப் படித்துப் பார்க்கச் சொன்னார்.

`உன் சினிமா தொழில் சின்னாபின்னமாக’, `நீ நாசமாகப் போக’, `உன் புள்ளைங்க உருப்படாமல் போக’, நீ ஜன்னி வந்து சாக’, உன் பொண்டாட்டி புள்ளைங்க அழிஞ்சு போக...’

இப்போது இதை எழுதும் போதே என் கைகள் நடுங்குகிறது என்றால், அதை வாசித்த போது என் மனம் என்னவாய் வெடித்திருக்கும்!

துடித்தபடி நானும் என் மனைவியும் கேட்டோம். ``யாருங்க...? யாருங்க..? யாருங்க எங்களுக்கு இப்படி செஞ்சிருப்பாங்க?’’

அமைதியாக எழுந்தவர், எங்கள் தலைமீது அவரின் கையை வைத்து (ஏற்கெனவே நாங்கள் தலையில் கை வைத்த படிதான் அமர்ந்திருந்தோம்.

``எல்லா செய்வினையையும் நான்தான் எடுத்திட்டேன்ல.... அப்புறம் ஏன் கவலைப்படு றீங்க? இனிமே நீங்க நல்லா இருப்பீங்க!’’ எனக் கூறிவிட்டு ஒரு வேப்பிலை மரமாய் வெளியேறினார்.

என் மனைவியின் அழுகையின் பின்னணியில் நான் மீண்டும் மீண்டும் அந்தத் தகடுகளைப் படித்தபடி, படிக்காமல் வெறித்தபடி இருந்தேன்.

யாராக இருக்கும்? இவ்வளவு வன்முறையான வார்த்தைகள் வர எது ஏதுவாக இருந்திருக்கும் என்று என் மண்டைக்குள் ஜல்லடை போட்டேன். முதலில் இந்தக் கையெழுத்து யாருடையது?

எங்கோ பார்த்த மாதிரி ஞாபகம்... அதுவும் சமீபமாக...
சலித்த பிறகு ஜல்லடையில், ஒரே மாதிரியான சுழித்தல் உள்ள நான்கைந்து எழுத்துகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

திடீரெனத் தலையில் தேங்காய் அடித்து உடைத்தது போல் ஒரு அனுமார் வால் பேப்பர்.

சாமியார் எழுதிக் கொடுத்த, அந்த `லிஸ்ட்’ பேப்பரை எடுத்துப் பார்த்தேன். என் கண்கள் மின்னின. அந்தத் தகடுகளையும், பேப்பரையும் ஒப்பிட்டேன். என் மனைவியைக் கூப்பிட்டேன்.

``ஆமா! ரெண்டு கையெழுத்தும் ஒரே மாதிரிதான் இருக்கு!’’
வலமிருந்து இடமாக பூமிப் பந்து சுழல்வதை எங்கள் தலைச் சுற்றலால் கவனிக்க முடியவில்லை.

பணம் சம்பாதிக்கும் ஆசையில் அதிபுத்திசாலித்தனம், செம்புத் தகடுகளாய் மாறி, சாத உருண்டைக்குள் நுழைந்து பூமிக்குள் புதைந்து மீண்டும் எங்கள் கைகளில். இதை நான் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சாமியாரின் மந்திர சக்தியால் இனி எங்கள் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்ற அளவில் நாங்கள் சந்தோஷமாக இருந்திருப்போம்.

அதிபுத்திசாலித்தனம், ஆபத்துகளை விளைவிக்க ஆயத்தமாக, ஆயுதமாக ஆகிவிடுமோ...?

சாமியார் சென்ற திசையைப் பார்த்தோம். தி.நகர் சென்று விட்ட அவருடைய கார் கிளப்பிய புழுதியில் புழுக்கமும், வேதனையும் பரவி, விரவி வியாபித்திருந்தது. நன்றி: `கல்கி’, 10.6.2007

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன் விளையாடின விபரீத விளையாட்டு. .

>> Monday, May 24, 2010

ஜோசியக்காரன் விளையாடின விளையாட்டுதான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு. மனைவிக்காக இல்லேன்னாலும், பிள்ளைக்காக சரியாகிடுவாருனு முகத்துல சிரிப்பு வந்துடுச்சு.

எனக்கு என்ன குழந்தை பிறந்துச்சு... தாயும் பிள்ளையும் செத்தாங்களா... பொழைச் சாங்களா...னு கூட எட்டிப் பார்க்கலை என் காதல் கணவர்.

பொண்ணை தூக்கி வளர்த்தோம். இனி அவ பெத்த பிள்ளையத் தூக்கி சுமக்க வேண்டியதுதான்னு பதறி அடிச்சுக்கிட்டு ஓடி வந்தாங்க என் அம்மா.

ஆண் பிள்ளை பிறந்திருக்குன்னு அவருக்குச் சொல்லி அனுப்பினதும், பிள்ளையப் பார்க்க வராம ஜோசியக்காரன் பார்க்கப் போயிருக்கார்.

அந்த ஜோசியக்காரனோடு பேர் என்னனு தெரியாது. ஊரு என்னனு தெரியாது. கறுப்பா, வெள்ளையா, நல்லவனா, கெட்டவனானு எதுவும் தெரியாது.

ஆனா, அவன் விளையாடின விளையாட்டுதான் என் வாழ்க்கையில பெரிய விபரீத விளையாட்டாச்சு.

இந்தக் குழந்தையால தகப்பன் உயிருக்கு ஆபத்துனு சொல்லிருக்கான் ஜோசியக்காரன்.

நல்ல புருஷனா இல்லன்னாகூட ஒரு நல்ல தகப்பனா இருக்கிற வாய்ப்புல பெரிய குழிதோண்டி தன் வார்த்தைகளால மண்ணை அள்ளி கொட்டிட்டான் அந்த புண்ணியவான்.

ஆஹா, பிள்ளையப் பார்க்க தகப்பன் வந்துட்டான்னு நிமிர்ந்தா, இந்தக் குழந்தை வேண்டாம்னு சொன்னதும் இடிஞ்சு போய் உட்கார்ந்தேன்.

குழந்தையைத் தூங்க வெச்சுட்டு வாசலுக்கு வந்தா, திடீர்னு வீறிட்டு அழறான் குழந்தை.

உள்ள போனா, குந்தையோட தொடை சிவந்திருக்கு.

பக்கத்துல பெத்தெடுத்த மகராசன் கல்லு மாதிரி நிக்கிறான்.

வன்மத்தோட பச்ச புள்ளைய கிள்ளிப் பார்க்கிற ஒருத்தன் இதுக்கு மேல எதுக்கு நம்ம வாழ்க்கைக்குன்னு வெறுத்துப் போய் அந்த உறவைத் தூக்கி எறிஞ்சேன்.

- நடிகை மனோரமா (‘குங்குமம்’, 14.2.2008)
*******************

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

>> Friday, May 21, 2010

காலையில் உணவு உண்ணாமல் இருப்பது, மிக அதிகமாகச் சாப்பிடுவது,, நிறைய சர்க்கரை சாப்பிடுதல், தூக்கமின்மை……
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
Best Regards, Dr.M.Sathick from Darulsafa

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP